சிவகங்கை: பிரதமர் மோடி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், நாட்டுக்கு போதிய முதலீடுகள் வந்ததாகவும், புதிய வேலை வாய்ப்புகள் உருவானதாகவும் தெரியவில்லை என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய நிதியமைச்சருக்குத் தெரியாமலேயே புதிய நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
"புதிய நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்பு பிரதமர் ஒரு கூட்டத்தைக் கூட்டியுள்ளார். அதில் நிதியமைச்சர் பங்கேற்கவில்லை.
"அவருக்குத் தெரியாமலேயே ஓர் அறிக்கை தயாராகியிருக்கிறது. படித்தது அவர் பங்கு எனில், எழுதியது தயாரித்தது யாருடைய பங்கு என்பது பின்னால் தெரியவரும்," என்றார் வீரமணி.
நாடு முழுவதும் இதுவரை 7 துறைகளில் 3 கோடி பேர் வேலை இழந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது ஒவ்வொரு துறையாக தனியாருக்கு விற்கப்பட்டு வருகிறது என்றார்.
விவசாயிகளின் வேதனைக்கு தீர்வு காணப்படவில்லை என்றும் அவர் மேலும் சாடினார்.

