நடிகர் ரஜினி காந்த்: இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் இருப்பதே சரி

நடிகர் ரஜினி காந்த்: இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் இருப்பதே சரி

2 mins read
1cc5738f-53c7-44d9-8ae0-a92f9ed0842e
-

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சில அரசியல் கட்சிகள் தேவையின்றி பீதியைக் கிளப்புவதாக நடிகர் ரஜினி குற்றம்சாட்டி உள்ளார்.

அந்தச் சட்டத் திருத்தத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை என்றும் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இஸ்லாமியர்கள் பலரும் இந்தியாவில்தான் இருப்போம் என்றும், இதுதான் தங்களது ஜென்மபூமி என்றும் முடிவு செய்து வாழ்ந்து வருவதாகத் தெரிவித்த அவர், அம்மக்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற இயலாது என்றார். இந்திய இஸ்லாமியர்களை வெளியேற்ற முயற்சி நடந்தால், அதை எதிர்த்து நிற்கும் முதல் நபர் தாமாகத்தான் இருக்க முடியும் என்றும் ரஜினி குறிப்பிட்டார்.

"குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி பொய்ச் செய்திகள் பரப்பப்படுகின்றன. இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என அரசியல் கட்சியினரால் பீதி கிளப்பப்படுகின்றன. இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை.

"மக்கள் தொகை பதிவேடு என்பதும் அவசியம். அப்போதுதான் யார் வெளிநாட்டுக்காரர் என தெரிய வரும். மாணவர்கள், தீர ஆராய்ந்து பேராசிரியர்கள், பெரியவர்களிடம் விவரம் கேட்டுப் போராடுங்கள்," என்று ரஜினி அறிவுறுத்தினார்.

அரசியல்வாதிகள் மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று குறிப்பிட்ட அவர், காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறும் மாணவர்களின் எதிர்காலம் வெகுவாகப் பாதிக்கப்படும் எனச் சுட்டிக்காட்டினார்.

"இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இலங்கையில் இருந்து அகதிகளாக இங்கு வந்து வாழ்வோருக்கு இந்தக் குடியுரிமை அவசியம்.

"ஆனால், சோழர் காலத்தில் இருந்து இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்து உள்ளனர். அங்கு வாழும், அவர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் என கேட்க வேண்டாம். அவர்கள் அங்கேயே இருக்கட்டும்," என்ற ரஜினி, தாம் நேர்மையாக வருமான வரி செலுத்துவதாகவும் தெரிவித்தார்.