சென்னை: பிரபல திரைப்பட விநியோகிப்பாளரும் நிதி நிறுவன அதிபருமான அன்புச்செழியன் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கை திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை அன்புச்செழியன் என்று குறிப்பிடப்படும் அவரது வீட்டில் இருந்து, ரூ.65 கோடி அளவிலான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதே போல் நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் கண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்தே அன்புச்செழியன், விஜய் மற்றும் ஒரு விநியோகிப்பாளர், குறிப்பிட்ட திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
விஜய் வீட்டில் இருந்து இப்படத்தில் நடித்ததற்காக பெற்றுள்ள சம்பளம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் அசையா சொத்துகள் தொடர்பான முதலீட்டு விவரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆவணங்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், திரையுலகைச் சேர்ந்த மேலும் பலர் வருமான வரித்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படலாம் என வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

