சென்னை: கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை ரஜினி தன் வருமானத்தை மறைத்ததாக குற்றம்சாட்டிய வருமான வரித்துறை அவருக்கு ரூ.66.22 லட்சம் அபராதம் விதித்தது. பின்னர் அபராதத்தை வசூலிக்கப்போவதில்லை என்றும் அறிவித்தது. இந்நிலையில் குறிப்பிட்ட காலகட்டத்தில் அவர் தனது வருமானத்தை மறைத்திருக்கலாம் என்பதால், முதலில் விதித்த அபராதத் தொகையை வசூலிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ரஜினிகாந்துக்கு வருமான வரியை மறைத்த விவகாரத்தில் அதிகபட்சமாக 300 விழுக்காடு அபராதம் விதிக்க வாய்ப்பிருந்தும் கூட அதிகாரிகள் குறைந்தபட்சமாக 100 விழுக்காடு. அதாவது 66 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மட்டும் அபராதம் விதிக்க முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனடிப்படையிலேயே, அவருக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான அபராதம் என்பதால் வருமானவரித்துறை தனது வழக்கை மீட்டுக்கொண்டுள்ளது. அதிகபட்சமாக 300 விழுக்காடு என அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், ரஜினிகாந்த் ஒரு கோடியே 98 லட்சம் ரூபாயை அபராதமாக செலுத்த நேரிட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

