தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி ஏறியதில் மூவர் பரிதாப பலி

தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி ஏறியதில் மூவர் பரிதாப பலி

1 mins read

மதுரை: பணி நடக்கும் இடத்தில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி ஏறிய சம்பவத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சோக சம்பவம் நேற்று முன்தினம் மதுரையில் நிகழ்ந்துள்ளது.

வைகை ஆற்றையொட்டி 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் புதன்கிழமையன்று, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அதே இடத்தில் ஓய்வெடுத்தனர். அப்போது பணியில் பயன்படுத்தப்பட்ட லாரியை அதன் ஓட்டுநர் இயக்கினார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களை அவர் கவனிக்கவில்லை.

இதனால் லாரியை இயக்கிய போது அது தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் வெங்கடேசன், பெரியசாமி உள்ளிட்ட மூவர் மீது ஏறி இறங்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னையைச் சேர்ந்த பாபு என்ற மற்றொரு தொழிலாளி படுகாயம் அடைந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அதற்குப் பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

மூன்று பேரை பலிவாங்கிய இந்த சம்பவம் குறித்து மதுரை போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.