காஞ்சிபுரம்: சென்னை மாநகரின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், காஞ்சிபுரம் பகுதியில் அந்த விமான நிலையம் அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய இடத்தை தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டாவது விமான நிலையம் சுமார் 4,500 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது என்றும், விமான நிலையம் அமைக்கும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது.
இதற்கான நடவடிக்கைகள் வேகம் பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், விமான நிலையம் அமைக்க தங்களது விளைநிலங்களைத் தர இயலாது என அப்பகுதி விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி இருப்பதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையம் அமைய உள்ள இடம் வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் துல்லியமாக வரையறுக்கப்படும் என்றும், அதன் பிறகே நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பரந்தூர், மாமண்டூர் பகுதியில் நிலங்கள் கையகப்படுத்தும் பணியை தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக் கழகம் மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் விவசாயிகள் தரப்பில் இருந்து இப்போதே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
எந்தக் காரணத்தைக் கொண்டும் விளைநிலங்களை விமான நிலையத் திட்டங்களுக்குக் கொடுக்க முடியாது என விவசாயிகள் திட்டவட்டமாகக் கூறி வருகின்றனர்.
புதிய விமான நிலையத்தை ஒட்டி, நட்சத்திர தங்குவிடுதிகள் அமைய உள்ளதாகவும், இது பசுமைவெளி அனைத்துலக விமான நிலையமாக அமையும் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

