சென்னை: தமிழக அரசு தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வு மோசடிகள் மூடி மறைக்கப்படுவதாகவும் ஆனால் குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ மோசடிச் செய்திகளை மட்டும் வெளியிடும் சாக்கில் தமிழக அரசாங்கம் பெரும் தில்லுமுல்லில் ஈடுபட்டு இருப்பதாகவும் எதிர்தரப்புத் தலைவர் ஸ்டாலின் பகிரங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
தேர்வாணைய ஊழல் இமாலய அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருப்பதாகவும் அதில் குரூப் 1 மோசடியே மிக முக்கியமானது என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
குரூப் 1 தேர்வு 2016ல் நடந்தது. அதில் தேர்ச்சி பெற்ற 74 பேரில் 62 பேர் ஒரு குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று மோசடி செய்து வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்பில் பலர் கைதுசெய்யப்பட்டார்கள்.
இருந்தாலும் இந்த வழக்கு 2018 ஜனவரியில் முடக்கப்பட்டது. பிறகு சென்ற ஆண்டில் மீண்டும் புகார்கள் தலைதூக்கின.
இந்த நிலையில், ஆளும்கட்சிக்கு சார்பான ஒரு சிலரைக் காப்பாற்றுவதற்காக தமிழக அரசு குரூப் 1 தேர்வு முடிவில் ஏராளமான மோசடிகளை மூடி மறைக்கிறது என்றும் அந்த மோசடிகள் அனைத்தும் விரைவில் வெளிச்சத்துக்கு வரவேண்டும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதனிடையே, தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு நடந்த இளநிலை பொறியாளர் தேர்விலும் முறைகேடு நடந்து இருப்பதாகத் தெரிகிறது.இது பற்றியும் சிபிசிஐடி போலிஸ் விசாரிக்கத் தொடங்கி இருக்கிறது.
இவை ஒருபுறம் இருக்க, கிராம நிர்வாக அதிகாரி தேர்விலும் மோசடிகள் இடம்பெற்று இருப்பதாகவும் ரூ. 15 லட்சம் லஞ்சம் கொடுத்து வேலையில் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ஒருவரை சிபிசிஐடி போலிஸ் கைதுசெய்து இருப்பதாகவும் தகவல்கள் கூறின.
நாராயணன் என்ற அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் 2016ஆம் ஆண்டு குரூப் 4 கிராம நிர்வாக அதிகாரி தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது.
மதுரையில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்திய தட்டச்சுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தகவல் வெளியான நிலையில், தனிப்படை போலிஸ் ஒரு பெண் உட்பட மூன்று பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே, நீதிமன்றத்தில் சரண் அடைந்த முக்கிய இடைத்தரகரான ஜெயக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அனுமதி பெற்றுள்ளது.
தேர்வு மோசடி தொடர்பில் ஏற்கெனவே கைதான பலர் பணியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வேளையில், இந்தத் தேர்வுமோசடிகள் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைக்க சிபிசிஐடி திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் கூறின.

