'வாக்கிடாக்கி' ஊழல்: பல இடங்களில் சோதனை

'வாக்கிடாக்கி' ஊழல்: பல இடங்களில் சோதனை

2 mins read

சென்னை: தமிழக போலிஸ் துறைக்குத் தொழில்நுட்பச் சாதனங்கள் கொள்முதல் செய்ததில் ரூ. 400 கோடி ஊழல் நடந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி இப்போது அது சூடுபிடித்து இருக்கிறது.

போலிஸ் அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பெரிய அளவில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

தமிழக காவல்துறையின் தொழில்நுட்பப் பிரிவில் அதிகாரியாக இருக்கும் அன்புச்செழியன் என்பவரின் வீடும் தப்பவில்லை. அவரின் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் நேற்று சோதனைகள் நடந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.

கடந்த 2016ஆம் ஆண்டு தொழில்நுட்பப் பிரிவில் பணியில் இருந்த போலிஸ்காரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று நுழைந்தனர்.

அதிமுக தலைவி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, போலிஸ் துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக தொழில்நுட்பச் சாதனங்களை வாங்குவதற்கு ஏலக்குத்தகை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில் வாக்கி-டாக்கி தொலைத்தொடர்புச் சாதனங்களை வாங்க விடப்பட்ட ரூ.88 கோடி மதிப்பிலான ஏலக்குத்தகை, விதி களை மீறி விடப்பட்டதாக பரபரப்பாக புகார் எழுந்தது. அதேபோல பிரத்தியேகப் படச்சாதனங்கள் உள்ளிட்ட தொழில்நுட்பக் கருவிகள் வாங்க விடப்பட்ட ரூ. 350 கோடி ஏலக்குத்தகையிலும் ஊழல் இடம்பெற்றதாக புகார்கள் பெரிய அளவில் தலைதூக்கின. ஆனாலும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமலேயே இருந்துவந்தது.

இந்தச் சூழலில், அந்தப் புகார்கள் அடிப்படையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக பல இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரம் தமிழகத்தில் புதிய அதிர்ச்சியைக் கிளப்பி இருக்கிறது.