சென்னை: தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-4, குரூப்-2ஏ தேர்வுகளில் பெரிய அளவில் முறைகேடுகளும் மோசடிகளும் நடந்து இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது பற்றி சிபிசிஐடி போலிஸ், வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளை போலிஸ் ஒவ்வொரு நாளும் தேடிப்பிடித்து கைது செய்கிறது. இதுவரையில் குரூப்-4 மோசடி தொடர்பில் 16 பேர் கைதாகி உள்ளனர்.
குரூப்-2ஏ முறைகேடுகள் தொடர்பில் 20 பேர் பிடிபட்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், கரூர் மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் இரண்டு பேர் நேற்று சிக்கினர்.
ஏற்கெனவே கைதாகி இருக்கும் இடைத்தரகர் ஜெயக்குமார், தேர்வாணையத்தின் ஊழியரான ஓம்காந்தன் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து போலிஸ் விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே, அரசு தேர்வாணையம் நடத்தக் கூடிய தேர்வுகளில் வெளிப்படைத் தன்மையை மேலும் அதிகரிக்கும் வகையில் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி விளக்கிய ஆணையத்தின் செயலாளர் க.நந்தகுமார், தேர்வு எழுத இனி ஆதார் கட்டாயம் ஆகும் என்றும் தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும் என்றும் கூறினார்.
தேர்வு நடவடிக்கைகள் நிறைவு பெற்றபின், தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள் நகல்களை இணையத்தளம் மூலமாக உரிய கட்டணம் செலுத்தி உடனடியாக பெற்றுக்கொள்ள ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படும் என்றும் இதர பல ஏற்பாடுகள் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

