முதல்வர்: குனிய முடியாததால்தான் காலணியைக் கழற்ற சிறுவனை 70 வயது அமைச்சர் அழைத்தார்

முதல்வர்: குனிய முடியாததால்தான் காலணியைக் கழற்ற சிறுவனை 70 வயது அமைச்சர் அழைத்தார்

2 mins read
cc71c871-a04d-4b03-8232-710b7d45ece0
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் -

கோவை: நீலகிரி மாவட்டம் முதுமலையில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாமைத் தொடங்கிவைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த ஒரு சிறுவனை அழைத்து தனது காலணியைக் கழற்றச் சொன்னார். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது பற்றி நேற்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, திண்டுக்கல் சீனிவாசனுக்கு 70 வயது ஆகிவிட்டது என்றும் அவரால் குனியமுடியாத காரணத்தினால் சிறுவனை அழைத்து காலணியைக் கழற்றச் சொன்னார் என்றும் முதல்வர் விளக்கினார்.

அப்போது அமைச்சரின் காலுக்கும் செருப்புக்கும் இடையில் ஒரு குச்சி சிக்கிக்கொண்டது என்றும் அதைக் குனிந்து எடுக்க அவரால் முடியவில்லை என்றும் பழனிசாமி குறிப்பிட்டார்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு சிறுவனையும் அவனுடைய பெற்றோரையும் கிராமத்தினரையும் அழைத்து தன் செய்கைக்கு அமைச்சர் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். என்றாலும் இந்த விவகாரத்தை இன்னும் சிலர் பெரிது படுத்துவது தமக்கு வேதனை அளிப்பதாக பழனிசாமி கூறினார்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடை பூங்கா தமிழ்நாட்டில் தலைவாசலில் அமைகிறது என்றும் அதற்கு இன்று அடிக்கல் நாட்டப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

அரசு தேர்வாணையம் முறைகேடு பற்றி கருத்துரைத்த அவர், தவறு செய்தவர்களுக்கு எதிராக ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறினார். நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து இருப்பதால் மாநிலத்தில் வறட்சி என்பதே இல்லை என்றார் அவர்.

திரைப்பட நடிகர் ரஜினிக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்துக் கூறி வருவது அவரின் கருத்து என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.