தொன்மையான 'தமிழி' கற்பித்தல்

தொன்மையான 'தமிழி' கற்பித்தல்

2 mins read
bf34dfa1-d5a4-4913-bab5-8623c43a6eb0
ராமசுப்பிரமணியம், சிறப்புப் பயிலரங்கு ஒன்றில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழ் மொழியின் பழைய முறையான தமிழி எழுத்துகளைப் போதிக்கிறார். படம்: தமிழக ஊடகம் -

கரூர்: இந்தியாவில் இன்னமும் இளமை குறையாமல் நாள்தோறும் வளர்ந்துவரும் ஒரே செம்மொழியான தமிழ் மொழியின் ஆகப் பழமையான எழுத்து வடிவங்களை மாணவர்களுக்குக் கற்பித்து அதன்மூலம் புராதன அறிவை அவர்களிடம் ஏற்படுத்த ஓர் இயக்கம் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

'தமிழி' எனப்படும் பழங்கால தமிழ் எழுத்து கி.மு. 3ஆம் நூற்றாண்டில் புழங்கியதற்குச் சான்றுகள் உள்ளன.

கோயில்களிலும் கல் படுகைகளிலும் குகைகளிலும் புராதனச் சின்ன நுழைவாயில்களிலும் நாணயங்களிலும் முத்திரைகளிலும் மண்பாண்டங்களிலும் அரண்மனைகளிலும் பனை ஓலைச்சுவடிகளிலும் தமிழி எழுத்துகள் உள்ளன.

அந்த எழுத்துகளில் குறிப்பிடத்தக்க 19 மாற்றங்கள் பல நூறு ஆண்டுகாலத்தில் இடம்பெற்று பரிணாம வளர்ச்சிபெற்று தமிழ் மொழி இன்றைய நிலையை அடைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 'மாணவர் இளையர் திருக்குறள் நல்வாழ்வு இயக்கம்' என்ற அமைப்பின் தேசிய ஒருமுகப்பாட்டாளரும் கரூர் மாவட்டத்தில் உள்ள 'பாரணி பார்க்' கல்வி நிலையங்களின் மூத்த முதல் வருமான டாக்டர் சி. ராமசுப்பிரமணியம், 2,500 ஆண்டு கால பழமையான தமிழி எழுத்துக்களை மீட்டெடுக்க பேரியக்கம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறார்.

தமிழகம் முழுவதும் இவர் முகாம்களையும் பயிலரங்குகளையும் நடத்தி வருகிறார். அவற்றில் ஆசிரியர்களும் மாணவர்களுமாக 6,000 பேர் கலந்துகொண்டு பயன் அடைந்து இருக்கிறார்கள்.

வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்துக்குள் 25,000 மாணவர்களுக்குத் தமிழி எழுத்துகள் பற்றி கற்பிக்க வேண்டும் என்பது இவருடைய இலக்கு.

2021 முடிவில் 100,000 பேருக்கு இந்த எழுத்துகளைப் போதித்து அவர்களிடம் புராதன அறிவை ஏற்படுத்த வேண்டும் என்று இவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.