அடுத்த புகார்: போலிசில் சேர 1,000 பேர் போலி சான்றிதழ்

அடுத்த புகார்: போலிசில் சேர 1,000 பேர் போலி சான்றிதழ்

1 mins read

சென்னை: தமிழ்நாட்டில் அரசாங்க வேலைகளுக்கு ஊழியர்களைச் சேர்த்ததில் ஏராளமான மோசடிகள் நடந்து இருப்பதாக அடுத்தடுத்து பல புகார்கள் தலைகாட்டி வருகின்றன. அந்த வரிசையில் இப்போது போலிஸ் தேர்வில் 1,000 பேர் முறைகேடு செய்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

தமிழக அரசின் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் 36 பேர் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இது பற்றி விசாரித்து வரும் சிபிசிஐடி போலிஸ், மேலும் பலர் பிடிபடுவார்கள் என்று கூறுகிறது.

இந்நிலையில், போலிஸ் வேலையில் போலி ஆவணங்கள் மூலம் 1,000 பேருக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்தாக புகார் கிளம்பி உள்ளது.

ஆகையால் இந்தப் பிரச்சினை பற்றியும் சிபிசிஐடி போலிஸ் விசாரிக்க வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ள தரப்புகள் கோருகின்றன. இரண்டாம் நிலை போலிஸ் அதிகாரிகள் பதவிக்கு 8,826 பேரைத் தேர்ந்தெடுக்க சென்ற ஆண்டு ஆகஸ்ட்டில் எழுத்துத் தேர்வு நடந்தது.

அதை எழுதிய 322,000 பேரில் 47,000 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு உடல் தகுதி தேர்வும் ஆவணச் சரிபார்ப்பும் நடந்தபோது பெரும் தில்லுமுல்லு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் 10 விழுக்காட்டு வேலைகள் விளையாட்டுப் பிரிவினருக்கு ஒதுக்கப்படுகின்றன.

இதில் சேர்ந்தவர்கள் போலியான சான்றிதழ்களைக் கொடுத்து இருக்கிறார்கள் என்றும் உடனே இதையும் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.