முதல்வர் பிரகடனம்: காவிரி டெல்டா வேளாண் மண்டலம்

முதல்வர் பிரகடனம்: காவிரி டெல்டா வேளாண் மண்டலம்

2 mins read

சேலம்: காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் என்று நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் அறிவித்தார்.

இதற்கான சட்டம் விரைவில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்தப் பகுதிகளில் எரிவாயு திட்டங்களுக்குத் தமிழக அரசு அனுமதி தராது என்று முதல்வர் திட்டவட்டமாகக் கூறினார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ. 1,000 கோடி செலவில் அமையவிருக்கும் ஒருங்கிணைந்த கால்நடை ஆய்வுப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் விவசாயப் பெருவிழாவைத் தொடங்கிவைத்து அங்கு கண்காட்சியையும் திறந்துவைத்தார். 15,000 பேருக்கு உதவிகளை வழங்கினார்.

அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும் தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று அறிவித்தார்.

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எனப்படும் எரிவாயுத் திட்டத்தை முதன்முதலாக அனுமதித்தது திமுகதான் என்றும் அதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டவர் ஸ்டாலின்தான் என்றும் முதல்வர் கடுமையாகக் குறைகூறினார்.

ஆனால் டெல்டா பகுதிகளில் எரிவாயுத் திட்டங்களை அதிமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று பலத்த ஆதரவுக்கு இடையே முதல்வர் அறிவித்தார்.

இதனிடையே, முதல்வரின் அறிவிப்புக்குப் பல தரப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

தன்னுடைய 10 அம்ச கோரிக்கைகளில் முதல் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றி இருக்கிறார் என்றும் இதற்காக அவருக்கு நன்றி கூறுவதாகவும் பாமக உடனடியாகத் தெரிவித்தது.

முதல்வர், அந்த நிகழ்ச்சியில் இதர பல அறிவிப்புகளையும் விடுத்தார். தமிழகத்திற்குக் கால்நடை வளர்ப்புத் தொழில் அதிக லாபம் ஈட்டித் தரும் தொழிலாக இருப்பதால் அந்தத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட பழனிசாமி, பால் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்று பெருமைபட கூறினார்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு திருவண்ணாமலை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கால்நடைத் தீவனத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

இவற்றோடு, ஓசூரில் ரூ. 20 கோடி செலவில் அனைத்துலக மலர் ஏல மையம் அமைக்கப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

இத்திட்டங்கள் எல்லாம் மாநிலத்தை மேலும் முன்னேற்றும் என்று அவர் கூறினார்.