சென்னை: பிரபல நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் தொடர்பிலான பிரச்சினையில் விஜய் உள்ளிட்ட மூவரை விசாரிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
நடிகர் விஜய், பிகில் படத் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம், திரைப்படம் எடுக்க பணம் கொடுக்கும் தொழில் நடத்தும் அன்புச்செழியன் ஆகிய மூவருக்கும் அடுத்த நாட்களில் இதற்கான உத்தரவு கடிதம் அனுப்பப்படும் என்று வருமான வரித் துறை குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு வெளியான பிகில் படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்ததாகச் செய்திகள் வெளியாயின. ஆனால் அதற்கான வரி செலுத்தப்படவில்லை என்ற அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த மூன்று பேரின் வீடுகளிலும் அலுவலகங்கள் உள்ளிட்ட இதர இடங்களிலும் நான்கு நாட்கள் சோதனை நடத்தினர்.
விஜய் படப்பிடிப்பில் இருந்தபோது அவரைக் கொண்டுசென்று கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள அவருடைய வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதிகாரிகள், கணக்கில் வராத ரூ.77 கோடி பணம், ரூ.300 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சோதனையில் கிடைத்த ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், பணம் பரிமாற்ற ஆவணங்கள் தொடர்பாக அந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, சுமார் 165 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததற்கும் கைப்பற்றப்பட்ட 77 கோடி ரூபாய்க்கும் முறையாக வரி செலுத்துவதாக அன்புச்செழியன் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவரைப் போலவே ஏஜிஎஸ் குழுமத்தினரும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

