சென்னை: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள டிஎன்பிஎஸ்சி வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஜெயக்குமார் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்கிக் குவித்தது தெரியவந்துள்ளது.
மேலும் கடந்த 10 ஆண்டுகளாகவே அவர் இந்த முறைகேட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்திய இரு தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து இந்த முறைகேட்டில் தொடர்புடைய பலர் கைதாகி வருகின்றனர். தேர்வாணையத்தின் ஊழியர்கள் இருவர், போலிசார் மூவர் ஆகியோரும் இந்த 35 பேரில் அடங்குவர்.
இந்நிலையில் இந்த முறைகேட்டிற்கு இடைத்தரகராகச் செயல்பட்ட ஜெயக்குமாருக்கு போலிசார் வலைவீசியிருந்தனர். எனினும் அவர்களிடம் சிக்காத ஜெயகுமார் நீதிமன்றத்தில் சரண டைந்தார்.
இதையடுத்து இடைத்தரகர் ஜெயக்குமார், தேர்வாணைய ஊழியர் ஓம் காந்தன், காவல்துறையைச் சேர்ந்த சித்தாண்டி ஆகிய மூவரையும் போலிஸ் காவலில் வைத்து சிபிசிஐடி போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சில தேர்வு மையங்களுக்கும் இவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் பங்கேற்ற சிலரது விடைத்தாள்களை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்து, அவற்றில் சரியான விடைகளை எழுதி முறைகேடு நடந்துள்ளது.
இதற்காக விடைத்தாள்களை ஏற்றிச் சென்ற வாகனத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் வைத்து தனியார் வாகனத்தில் இருந்து விடைத்தாள்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த இடத்துக்கு மூவரையும் போலிசார் அழைத்துச் சென்று விடைத்தாள்களை எடுத்த சம்பவத்தைப் போன்று நடித்துக் காட்டக் கூறினர். பின்னர் அது காணொளியாகப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இடைத்தரகர் ஜெயக்குமார் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை வாங்கிக் குவித்தது தெரியவந்துள்ளது. சென்னையில் மட்டும் அவருக்கு மூன்று வீடுகள் இருப்பதாகவும், அண்ணாநகரில் தனி அலுவலகம் ஒன்றை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
போலிஸ் விசாரணையில் ஜெயக்குமார் தெரிவிக்கும் தகவல்களின் பேரில் மேலும் சில முக்கியப் புள்ளிகள் இம்முறைகேடு தொடர்பாக கைதாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முறைகேட்டில் தமிழக அமைச்சர்களுக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. எனினும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்குச் செவிசாய்க்கவில்லை.

