குமரி: காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனைப் படுகொலை செய்தவர்கள் பல்வேறு மாநிலங்களில் நாசவேலைக்குத் திட்டமிட்டிருந்ததாக போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வில்சனைக் கொலை செய்த தவுபீக், அப்துல் ஷமீம் ஆகிய இருவருக்கும் வாடகைக்கு வீடு பிடித்துக் கொடுத்த செய்யது அலி என்பவரிடம் நடந்த விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்ததாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் விதுரா பகுதியில் கணினி மையம் ஒன்றை நடத்தி வந்தார் செய்யது அலி. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் அவர் தகவல்களைப் பரிமாறி வந்ததாகக் கூறப்படுகிறது.
வில்சன் படுகொலை வழக்கில் கைதாகியுள்ள தவுபீக், அப்துல் ஷமீம் ஆகியோருடன் இவர் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.
மேலும் கடலூரைச் சேர்ந்த காஜா மொய்தீன் என்பவரும் இவர்களுடன் சேர்ந்து செயல்பட்டு வந்துள்ளார்.
இவர்கள் நால்வரும் பல்வேறு மாநிலங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது.
இதற்காக வில்சன் படுகொலை செய்யப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் பெங்களூருவில் 15க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சதி வேலைகள் தொடர்பாக ஒன்றுகூடி ஆலோசனை நடத்தியதாக போலிசாரிடம் செய்யது அலி தெரிவித்துள்ளார்.
எனினும் வில்சன் கொலையை அடுத்து போலிசார் பலரை அதிரடியாகக் கைது செய்தனர். இதனால் ஆள் பலம் இன்றி நாசவேலைக்கான திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை என்றும் அவர் கூறியதாக போலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து செய்யது அலி குறிப்பிட்ட மேலும் சிலருக்கு போலிசார் வலை வீசியுள்ளனர்.
கடந்த 7ஆம் தேதிதான் செய்யது அலி கைது செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணையிலேயே அவரிடமிருந்து பல்வேறு முக்கிய தகவல்களைப் போலிசார் பெற்றுள்ளனர். எனவே, அவரை ரகசிய இடத்தில் வைத்து மேலும் விரிவாக விசாரணை நடத்த போலிசார் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
மேலும் செய்யது அலிக்கு வேறு தீவிரவாத தொடர்புகள் உள்ளனவா என்ற கோணத்திலும் விசாரணை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.
அவர் யாருடன் தகவல்களைப் பரிமாறி வந்தார்? என்று விசாரணை நடந்து வரும் நிலையில், எந்தெந்த மாநிலங்களுக்குத் தீவிரவாதிகள் குறிவைத்தனர் என்பன உள்ளிட்ட விவரங்களையும் போலிசார் சேகரித்து வருகின்றனர்.

