தைப்பூசத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நிலாச்சோறு திருவிழா விமரிசையாக நடந்தேறியது. இதில் பங்கேற்ற பெண்கள் விடிய விடிய கும்மியடித்து, பாடல்கள் பாடி மகிழ்ந்தனர்.
ஈரோடு மாவட்ட கிராமப்புறங்களில் தைப்பூசத்தை ஒட்டி நிலாச்சோறு திருவிழா நடப்பது வழக்கம். தைப்பூசத்துக்கு ஐந்து நாட்கள் முன்பே பல கிராமங்களில் இந்நிகழ்வு நடந்தேறும். முதல் 4 நாட்களுக்கு இரவில் பெண்கள் கூடி கும்மியடிப்பதுடன், தாங்கள் கொண்டு வந்த உணவுகளைப் பங்கிட்டு உண்டு மகிழ்வர். ஐந்தாம் நாள் இரவு இக்கொண்டாட்டம் திருமண நிகழ்ச்சி போல் விமரிசையாக இருக்கும். இதன்மூலம் சாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி ஒற்றுமையாகப் பழகமுடிகிறது என்றும் இந்த நிலாச்சோறு திருவிழா மூலம் மும்மாரி மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம் என்றும் இப்பகுதிப் பெண்கள் கூறுகின்றனர். படம்: ஊடகம்

