ஐபிஎஸ் அதிகாரியான கணவரை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரும் மனைவி

ஐபிஎஸ் அதிகாரியான கணவரை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரும் மனைவி

2 mins read
426853dd-ae36-46ca-ba8e-179f96cd75c9
ஐபிஎஸ் அதிகாரியான தனது கணவர் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்துவதாக மனைவி புகார் எழுப்பி உள்ளார். படம்: ஊடகம் -

சென்னை: ஐபிஎஸ் அதிகாரியான தனது கணவர் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்துவதாக மனைவி புகார் எழுப்பி உள்ளார்.

மேலும் கணவரைக் கண்டித்து சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதி கேட்டு அவர் காவல்துறையில் மனு அளித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த 24 வயதான அருணாவுக்கும், ஐபிஎஸ் அதிகாரி ஆனந்துக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கேரளாவில் பயிற்சி அதிகாரியாகப் பணியில் உள்ளார் ஆனந்த்.

இந்நிலையில் திருமணமான சிறிது காலத்திலேயே கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்துப் பிரிந்து வாழும் இருவரும் விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது தாயாருடன் சென்னைக் காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார் அருணா. தனது கணவர் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாகவும், தம்மை அடித்து உதைத்துக் கொடுமைப்படுத்தினார் என்றும் அவர் புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக போலிசில் புகார் அளித்தபோது அவர்கள் அதைப் பதிவு செய்யவில்லை என்பதால் தாம் நீதிமன்றத்தை அணுக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதன்பிறகும் போலிசார் தமது புகாரை மதிக்கவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"எனது புகார் மனுவை ரத்து செய்யும் நோக்கத்துடன் போலிசார் செயல்படுகிறார்கள். எனது கணவர் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் வழக்குப் பதிவு செய்ய போலிசார் தயங்குகின்றனர். எனவே, காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுக்க உள்ளேன்.

"எனக்கு நியாயம் கேட்டு மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளேன். அதற்கு அனுமதி அளிக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளேன்," என்று அருணா செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்தார்.

தமக்கு உரிய நியாயம் கிடைக்கும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.