பெங்களூரு: ஐம்பது ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ள தமிழருவி மணியனை விமர்சிக்க விரும்பவில்லை என அமமுக பொதுச் செயலர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நேற்று முன்தினம் அவர் நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், காவிரி டெல்டா பகுதியை வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக அறிவித்த தமிழக அரசின் முடிவை தாம் வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.
மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், வெறும் அறிவிப்போடு நிறுத்தாமல் உண்மையாக அதைச் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், சேலம் - சென்னை 8 வழிச்சாலை, நியூட்ரினோ திட்டத்தையும் அமல்படுத்தக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.
"தமிழருவி மணியன் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ளவர். அவருடன் எனக்கு நேரடியாக எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனால் அவரை மதிக்கிறேன். சில கருத்துகளை தெரிவித்ததற்காக அவரை பதிலுக்கு விமர்சித்துப் புண்படுத்த விரும்பவில்லை.
"காவிரி ஆற்றில் மாசு கலப்பதாகப் புகார் உள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார் தினகரன்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் வருமான வரித்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படக்கூடாது என்றார்.
அண்மையில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையையும், ரஜினியின் வருமான வரிக் கணக்கு தொடர்பாக வெளியான தகவலையும் மறைமுகமாக குறிப்பிட்டே தினகரன் இவ்வாறு கூறியதாகத் தெரிகிறது.

