டிஎன்பிஎஸ்சி தேர்வில் இனி சிறு தவறும் நிகழாது: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

டிஎன்பிஎஸ்சி தேர்வில் இனி சிறு தவறும் நிகழாது: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

1 mins read

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு விவகாரத்தில், எதிர்காலத்தில் சிறு தவறும் நிகழாத வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

"முதல்வரின் அறிவிப்பு பலருக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு விவகாரத்தில் அய்யப்பன் என்பவரை சிபிசிஐடி போலிசார் கைது செய்துள்ளனர்.

"அவர் யார் என்றால் திமுகவைச் சேர்ந்த அப்பாவுவின் கூட்டாளி. இதற்கு அப்பாவு என்ன பதில் சொல்லப் போகிறார்?" என அமைச்சர் ஜெயயக்குமார் கேள்வி எழுப்பினார்.

இத்தகைய முறைகேடுகள் எல்லாம் திமுக ஆட்சிக் காலத்தில் விதைக்கப்பட்ட பார்த்தீனிய செடிகள் என்று விமர்சித்த அவர், அதிமுக ஆட்சியில் அச்செடிகளைக் களையெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

"தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக இதுவரை 35க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் தேர்வுகளில் சிறு தவறும் நிகழாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன," என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

இதற்கிடையே, டிஎன்பிஎஸ்சி தேர்வில் விடைத்தாள்களைத் திருத்தம் செய்ய இடைத்தரகர் ஜெயக்குமாருக்கு உதவி செய்த 3 ஓட்டுநர்கள் சிக்கி உள்ளனர்.

தேர்வு முறைகேட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வழக்கை விசாரிக்கும் போலிசார் தெரிவித்துள்ளனர்.