பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

தமிழகத்தின் கோயமுத்தூரில் நகரின் முக்கிய சாலை ஒன்றில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பேருந்து ஒன்றின் முன்புற சக்கரத்தில் சிக்கி, சில மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டபோதும் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர்.

அதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வெகுவாகப் பரவி வருகிறது. 

வேகமாகச் சென்ற பேருந்து வளைவில் திரும்பும்போது இருசக்கர வாகனம் அந்தப் பேருந்துடன் மோதுவதும் அந்த வாகனத்துடன் அதில் பயணம் செய்த இருவரும் பேருந்தின் முன்புற சக்கரத்தின் கீழ் விழுவதும் காணொளியில் தெரிகிறது.

பேருந்து உடனடியாக நில்லாத நிலையில் சக்கரத்தின் கீழ் சிக்கிய இருவரும் சில மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்படுவதைக் காண முடிகிறது. 

பேருந்து நின்றதும் அதிலிருந்து இறங்கிய பயணிகள் அவர்களை மீட்க முற்படுகின்றன.

அதே சமயம், பேருந்துக்கு அடியில் சிக்கிய இருவரும் எழுந்து வெளியே வர முயற்சி செய்வதையும் அந்தக் காணொளியில் பார்க்கலாம்.

மிகவும் மோசமான விபத்துபோல பார்ப்பவரை அச்சத்தில் ஆழ்த்தும் இந்த விபத்தில் சிக்கிய இருவரும் உயிர்தப்பியதற்கு அவர்கள் அணிந்திருந்த தலைக்கவசம்தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

#தமிழ்முரசு #கோவை #கோயமுத்தூர் #விபத்து