நகை, பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டிக்கு குவியும் பாராட்டு

மதுரை: மதுரையில் பெண் பயணி ஒருவர் ஆட்டோவில் தவறவிட்ட நான்கரை பவுன் நகையையும் ரூ.23,000 பணத்தையும் தானே அபகரித்துவிடாமல் அதை பத்திரமாக அந்தப் பயணி யிடமே ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். 

  மதுரை விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண் கடந்த 10ஆம் தேதி காளவாசல் செல்வதற்காக ஆட்டோவில் சென்றார். அதன் பின்னர் பயணம் முடிந்து ஆட்டோவில் இருந்து இறங்கிய ராஜலட்சுமி தன் கையில் வைத்திருந்த கைப்பையை  ஆட்டோவிலேயே தவறவிட்டுச் சென்றுவிட்டார்.  

நீண்ட நேரம் கழித்து ஆட்டோவில் இருந்த பையைக் கண்ட ஓட்டுநர் ஷேக் மீரான் பையைத் திறந்து பார்த்து உள்ளார். அதில் நான்கரை சவரன் நகையும் 23,000 ரூபாய் பணமும் இருந்தது. இதனைத் தொடர்ந்து கரிமேடு காவல்நிலையத்தில் நகை, பணத்தை அவர் நேர்மையுடன் ஒப்படைத்தார்.

இதையடுத்து, மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் பையைத் தவறவிட்ட ராஜ லட்சுமியை கண்டறிந்து நகை கள், பணத்தை வழங்கினார். அத்துடன்  நேர்மையாக கைப்பையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு வெகுமதிகளும் வழங்கிப் பாராட்டினார்.