மருமகளின் புகாருக்கு எதிராக மாமனார் போர்க்கொடி

மருமகளின் புகாருக்கு எதிராக மாமனார் போர்க்கொடி

2 mins read
018a2385-bec6-4239-b317-f6fcde92ec26
தனது ஐபிஎஸ் கணவர் மீது புகார் அளித்த அருணா (வலது). படம்: ஊடகம் -

சென்னை: என் மருமகள் என் மகன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. அவரது குற்றச்சாட்டின்படி என் மகன் அவரிடம் வரதட்சணை கேட்கவும் இல்லை, வாங்கவும் இல்லை என்று ஐபிஎஸ் அதிகாரியின் தந்தை ஒருவர் தனது மருமகளுக்கு பதிலடி தரும் வகையில் சென்னை போலிஸ் ஆணையர் அலுவலகத்தில் பதில் புகார் மனு அளித்துள்ளார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ஆனந்த். கேரள மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக உள்ள இவருக்கும் சென்னையைச் சேர்ந்த அருணா என்பவருக்கும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

பிரிந்து வாழும் இவர்களின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதைத்தொடர்ந்து அருணா தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலிஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், தனது கணவர் ஆனந்த் வரதட்சணை கேட்டு தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் இன்னொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக தன்னை வீட்டை விட்டு விரட்டிவிட்டதாகவும் நியாயம் கேட்டு மெரினா காந்தி சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி ஆனந்தின் தந்தை ராஜகுரு, தனது மருமகள் அருணாவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி தரும் வகையில் நேற்று சென்னை போலிஸ் ஆணையரைச் சந்தித்து புகார் மனு அளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனது மருமகள் அருணா கொடுத்த புகாரில் எவ்வித உண்மையும் இல்லை. திருமணத்துக்கு முன்பு நாங்கள் வரதட்சணை கேட்கவும் இல்லை. வாங்கவும் இல்லை. வரதட்சணையாக ரொக்கப்பணம் தருவதாகக் கூறியதையும் நாங்கள் வேண்டாம் என்று கூறி விட்டோம். அதற்கான ஆடியோ ஆதாரத்தை தேனாம்பேட்டை போலிசில் சமர்ப்பித்துள்ளோம்.

"எனது மகன் 2வது திருமணம் செய்ய முயன்றதாக அருணா சொல்லியிருப்பது தவறா னது," என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.