கைபேசிக்காக நடக்கும் தொடர் கொலைகள்: பீதியில் கோவை மக்கள்

கோவை: கைபேசிகளுக்காக கொலை செய்யும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்வதால் கோவை மக்கள் பீதியில் உள்ளனர். 

அங்கு இரவு வேளையில் தனியாகச் செல்பவர்களிடம் பணம், நகைகளைப் பறித்த காலம் மலையேறிவிட்டது. தற்போது கைபேசிக் கருவிகளை பறித்துச் செல்லும் சம்பவங்கள்தான் அதிகரித்து வருகின்றன.

அண்மையில் அரசூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவரை வழிமறித்த சிலர், அவரிடம் இருந்த விலையுயர்ந்த கைபேசியைப் பறிக்க முயன்றுள்ளனர்.

ஆனால் தமிழ்ச்செல்வன் உதவி கேட்டு குரல் எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர்.

இதில் படுகாயமடைந்த தமிழ்ச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இதே போல் பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மகாலிங்கம் என்ற இளையரை மர்ம நபர்கள் திடீரென முதுகில் கத்தியால் குத்தி நிலைகுலையச் செய்து அவரது கைபேசியைப் பறித்துச் சென்றுள்ளனர்.

கைபேசி பறிப்புடன் கூடிய கொலைச் சம்பவங்களால் கோவை மக்கள் பீதியில் மூழ்கியுள்ளனர்.  இதனால் இரவு நேரங்களில் நகை அணிந்து செல்லக் கூடாது, அதிக பணத்துடன் நடமாடக் கூடாது என்று அறிவுரை கூறிய காலம் மாறிப்போய், விலை உயர்ந்த கைபேசிகளுடன் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக புகார்கள் அதிகரித்து வருவதால், கொள்ளையர்களைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மிக விரைவில் இச்செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என கோவை போலிசார் தெரிவித்துள்ளனர்.