தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம்

தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம்

2 mins read

சென்னை: மத்திய அரசின் குடி யுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு நேற்று தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி நெல்லை, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பல இடங்களிலும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டங்கள் தொடர்ந்தன.

சென்னையில் உயர் நீதிமன்றத் தடையையும் மீறி தலைமைச் செய லகத்தை முற்றுகையிட போராட்டக் காரர்கள் பேரணியாகச் சென்றனர்.

இந்த உத்தரவு தங்களுக்குப் பொருந்தாது என்று கூறிய இஸ் லாமிய அமைப்புகள் திட்டமிட்டபடி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதனால் தலைமைச் செயலகம் செல்லும் சாலைகளில் போலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தடையை மீறி சட்டப்பேரவையை நோக்கிச் செல்பவர்கள் தடுத்து நிறுத்தப் பட்டு கைது செய்யப்படுவார்கள் என்றும் 10,000 போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

இந்நிலையில், அடையாள அட்டை, தேசியக் கொடியுடன் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோஷமிட்டபடி இஸ்லா மியர்கள் பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் தொடங்கிய ஒரு சில மணி நேரங்களில் குடி யுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான இஸ்லாமிய அமைப்பினரின் போராட்டம் நிறைவடைந்ததாகவும் நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் சட்டப்பேரவையை முற்றுகையிட வில்லை என்றும் கூறி போராட்டக் காரர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர்.

சட்டமன்றத்தை முற்றுகையிட சென்னை உயர் நீதிமன்றம் மார்ச் 11ஆம் தேதி வரை தடைவிதித்து உத்தரவிட்டு இருப்பதால் பேரணி யினர் சேப்பாகம் வரை பேரணியாகச் சென்று போராட்டத்தை முடித்தனர்.

இந்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளும் மாணவ அமைப்புகளும் போராடி வரும் நிலையில், சட்டமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரவேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் இந்தச் சட்டத்திற்கு எதிராக 2 கோடி கையெழுத்துப் பிரதிகளை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அதிபர் மாளிகையில் அதிபர் ராம்நாத் கோவிந்திடம் ஒப்படைத்தனர்.