ஆண்களுக்கும் கருத்தடை சிகிச்சை;  அமைச்சர் அழைப்பு

சென்னை: கருத்தடை சிகிச்சைகளை செய்துகொள்ள பெண்களைப் போலவே ஆண்களும் முன்வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து பேரவையில் எழுந்த சிரிப்பலை அடங்க சற்று நேரமானது.  

தமிழக சட்டப்பேரவையில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் மூன்றாவது நாளாக நேற்றும் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் பரமசிவம், கருத்தடை சிகிச்சை குறித்து கேள்வி எழுப்பினார்.  

அதற்குப் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “நாட்டின் பொரு ளியல் வளர்ச்சிக்கு மக்கள் தொகை கட்டுப்பாடு முக்கியம். கருத்தடை செய்வதற்கென்றே தனியாகத் துறை அமைக்கப் பட்டு, ஆண்டுக்கு இரண்டு லட்சம் பெண்களுக்குக் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 “2019ஆம் ஆண்டு 800 ஆண்களுக்கு இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விருப்பமுள்ள, தகுதியுள்ள ஆண்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு கத்தியின்றி, ரத்த மின்றி, எவ்வித தழும்புமின்றி இரண்டு மணி நேரத்தில் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படும். எனவே இச் சிகிச்சைக்கு பெண்களைப் போலவே ஆண்களும் தயங்கா மல் முன்வரவேண்டும்,” என்றார். 

அமைச்சரின் இந்தப் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.