'செல்பி' மோகத்தால் செங்கோட்டை காட்டில் தொலைந்துபோன இளைஞன்

செங்கோட்டை: தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை புளியரை பாதையையொட்டி இருக்கும் பெரும்பகுதி அடர்ந்த காடுகள் நிறைந்த மலைப்பாதையாகும். இங்கு மான், மிளா, காட்டெருமை, யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான காட்டு விலங்குகள் உள்ளன. கேரள எல்லையான ஆரியங்காவு பகுதியில் ரோஸ் மலை என்ற சுற்றுலாத் தலம் உள்ளது.

இந்நிலையில் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த சுமே‌ஷ் (வயது23), அஜே‌ஷ் (வயது 22) ஆகிய இருவரும் இந்தக் காட்டைச் சுற்றிப் பார்த்து செல்ஃபி எடுத்து சமூக ஊடகத்தில் பதிவேற்றி பகிரலாம் என்ற ஆசையுடன் மோட்டார் சைக்கிளில் காட்டுக்குச் சென்றனர்.

காட்டுக்குள் சென்ற அவர்கள் செல்பி எடுக்க முயன்றபோது புளியரை அருகே உள்ள காட்டில் திடீரென ஏதோ சத்தம் கேட்க, அந்த இரண்டு நண்பர்களும் ஆளுக்கொரு திசையாக அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

பல மணி நேரம் கழித்து நீண்ட போராட்டத்துக்கு பின் அஜேஷ் அதே இடத்துக்கு வந்து சேர்ந்தார். ஆனால் சுமேஷ் அடர்ந்த காட்டுப்பகுதியில் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் உள்ளே சென்றுவிட்டார். சிக்னல் கிடைக்காததால் அவரால் கைத்தொலைபேசியைப் பயன்படுத்த முடியவில்லை.

மிருகங்களுக்குப் பயந்து உயரமான மரம் ஒன்றில் ஏறி நின்றுகொண்டார். அப்போது தனது கைத்தொலைபேசிக்கு சிக்னல் கிடைத்துவிட்டதை அறிந்த அவர் போலிசுக்குத் தகவல் தெரிவித்தார். காட்டுவளத்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் பொதுமக்களின் சுமேசை தீவிரமாகத் தேடினர். நன்ளிரவு வரையில் தேடியும் பயனில்லை. தேடுதலை வேட்டையை நிறுத்திய அவர்கள் மீண்டும் அதிகாலையில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின், சுமே‌ஷ் ஒரு மரத்தடியில் மயங்கிக் கிடக்கக் காணப்பட்டார். பின்னர் போலிசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.