திருப்பூர் சாலை விபத்து: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

திருப்பூர் சாலை விபத்து: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

2 mins read
5f0b8b23-ef91-443e-827b-0eb960d8c666
அவினாசி அருகே விபத்துக்குள்ளான பேருந்தின் இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை பொதுமக்களும் காவல்துறையினரும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: ஊடகம் -

அவினாசி: அவினாசி அருகே கேரள அரசு பேருந்தும் கொள்கலன் வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

கேராளாவின் கொச்சியில் இருந்து சேலத்திற்குச் சென்றுகொண்டிருந்த கொள்கலன் வாகனம் ஒன்று அதிகாலை 3.20 மணியளவில் அவினாசி அருகே உள்ள ராக்கியா பாளையம் அருகே சேலம் 6 வழி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கொள்கலன் வாகனத்தின் முன்பக்கம் சக்கர டயர் வெடித்தது.

இதில் நிலை தடுமாறிய லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்த கேரள மாநிலத்தின் அரசு சொகுசுப் பேருந்து மீது மோதியது. பின்னர் அரை கிலோ மீட்டர் தூரம் பேருந்தை கொள்கலன் வாகனம் இழுத்துச் சென்றது. அந்தப் பேருந்து பெங்களூருவில் இருந்து எர்ணாகுளத்துக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்தது.

இதனால் கொள்கலன் வாகனம் தனியாகவும், அதன் இயந்திரப் பாகங்கள் தனியாகவும் இரண்டாகப் பிரிந்தன. பேருந்து ஒரு பகுதி முழுவதும் உருக்குலைந்தது. அதன் வலது பக்க இருக்கைகள் அனைத்தும் சேதமடைந்தது. செய்வதறியாது திகைத்த பயணிகள் உதவி கேட்டு கதறினர்.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், 6 பெண்கள் உள்பட 19 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள். 23 பேர் படுகாயமடைந்தனர். பேருந்தின் பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஐந்து பேர் மட்டும் எவ்விதக் காயமுமின்றி உயிர் தப்பினர்.

பலியானவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்ததால் பேருந்தின் இருக்கைகளை உடைத்து அவர்களது உடலை மீட்டனர். அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கிய மீட்பு பணி காலை 8 மணி வரை நீடித்தது.

விபத்தில் பலியானவர்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். முக்கால்வாசிப் பேர் கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

பலியானவர்கள் பெயர், விவரம் உடனடியாக தெரியவில்லை. காயமடைந்த 23 பேர் திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொள்கலன் ஓட்டுநர் தலைமறைவானார். அவரை போலிசார் தேடி வருகின்றனர்.