சென்னை: உலக தாய்மொழி நாளை ஒட்டி நேற்று தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சு வழிகாட்டுதலின்படி கல்வி நிலையங்களில் சொற்பொழிவு, விவாதம், பாட்டு, கட்டுரை, ஓவியம், இசை, நாடகம், கண்காட்சிகள் என பல்வேறு வடிவங்களில் தமிழ்மொழி நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
உலகின் மிகத் தொன்மையான செம்மொழிகளில் இன்னமும் குன்றா இளமையுடன் திகழ்ந்துவரும் தமிழ் மொழியின் அருமை பெருமைகளைப் பல நிகழ்ச்சிகளிலும் வல்லுநர்கள் விளக்கினர்.
தமிழில் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டும்படியும் பிறமொழி கலப்பு இல்லாமல் கூடுமான வரையில் தமிழை அதிகமாகப் பயன்படுத்தும்படியும் தமிழர்களுக்குப் பல தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர்.
மொழி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. உலக தாய்மொழி நாளையொட்டி சென்னையில் வேலூர் தொழில்நுட்பக் கழகத்தின் வேந்தர் ஜி விஸ்வநாதன் தொகுத்துள்ள 'சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப் பெயர்கள்' என்ற நூல் வெளியிடப்பட்டது. அதில் 50,000 தமிழ்ப்பெயர்கள் அடங்கி இருக்கின்றன.
நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய வேந்தர் ஜி விஸ்வநாதன், உலகில் 150 நாடுகளில் 28 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தமிழ் பேசுகிறார்கள் என்று தெரிவித்தார். நான்கு நாடுகள் தமிழை ஆட்சிமொழியாக அங்கீகரித்து இருக்கின்றன என்று அவர் கூறினார்.
என்றாலும் புற ஆதிக்கம் காரணமாக பலரும் பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயரைச் சூட்டுவதில்லை என்று வருந்திய அவர், தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களையே சூட்ட வேண்டும் என்றார்.
தாய்மொழிக்காக உயிரைத் தியாகம் செய்த மாணவர்களின் நினைவாக 2,000 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பிப்ரவரி 21ஆம் தேதி அனைத்துலக தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

