சென்னை: சென்னை விமானநிலையத்தில் நடந்த தங்கக் கடத்தல் சம்பவம் தொடர்பில் சுங்கத்துறை அதிகாரிகள் இரண்டு பேர் கைதாகி இருக்கிறார்கள்.
அவர்களும் கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் இதர 14 பேரும் இப்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
விமானநிலையத்தில் புதன்கிழமை இரவு நேரத்தில் நடந்த தங்கக் கடத்தல் சம்பவம் பெரும் பிரச்சினையாகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர், துபாய், இலங்கை நாடுகளில் இருந்து சென்னைக்குப் பயணிகள் மூலம் தங்கம் கடத்தப்படுவதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து ரகசியமாக விமானநிலையத்தில் பலரையும் கண்காணித்து வந்த அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான 18 பேரைப் பிடித்தனர்.
அவர்களிடம் ரூ. 6 கோடி மதிப்பிலான சுமார் 13 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் சுமார் 15 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு அவர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த நிலையில், விமான நிலையத்தில் இருந்த அந்த 18 பேரின் உறவினர்களும் நண்பர்களும் அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தக் குழப்பத்தில் சந்தேகப்பேர்வழிகள் 18 பேரும் தப்பிவிட்டனர்.
உடனே இது பற்றி புலனாய்வு அதிகாரிகள் போலிசிடம் புகார் தெரிவித்தனர். போலிசார் 13 பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்கள் தெரிவித்த தகவல்களை அடுத்து சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை ஆய்வாளர்களாகப் பணிபுரியும் விகாஷ் குமார், ராஜன் ஆகியோரும் ஓய்வுபெற்ற சுங்கத்துறை அதிகாரியான சதீஷ்குமார் என்பவரும் பிடிபட்டனர்.
ஓய்வுபெற்ற அதிகாரி சதீஷ்குமார், கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக நம்பப்படும் சுங்கத்துறை ஆய்வாளர்கள் இருவர், பிடிபட்ட சந்தேகப்பேர்வழிகள் 13 பேர் ஆகிய மொத்தம் 16 பேரும் மார்ச் 6ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
விமானநிலையத்தில் நடந்து வரும் தங்கக் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் மேலும் சிலரை புலன்விசாரணை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.
சென்னை விமானநிலையத்தில் அதிகாரிகளின் துணையுடன் பெரிய அளவில் கடத்தல் சம்பவம் நடந்து வருவதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

