போலிஸ் அதிகாரி கொலை தொடர்பில் வீடுகளில் சோதனை

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட  விவகாரம் தொடர்பில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள்  நேற்று அதிகாலை முதல் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர சோதனைகளை நடத்தினர்.

கன்னியாகுமரி களியக்காவிளை சோதனைச் சாவடியில் ஜனவரி 8ஆம் தேதி பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரி எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். 

அந்தக் கொலை தொடர்பாக அப்துல் சமீம், தவ்பீக் என்ற இருவர் கர்நாடகாவில் பிடிபட்டனர்.

கொலையாளிகளுக்கு உதவிய தாகச் சந்தேகிக்கப்படும் பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்தக்  கொலை தொடர்பான விசாரணைகளை என்ஐஏ நடத்தி வருகிறது. 

இந்நிலையில், சென்னை, சேலம், கடலூர் மற்றும் காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் ஆறு இடங்களில் அதிகாரிகள் நேற்றுக் காலை முதல் சோதனை நடத்தினர்.

பயங்கரவாதிகளுக்கும் கைதானவர்களுக்கும் இடைப்பட்ட தொடர்புகள் தொடர்பில் தமிழகத்திலும் கர்நாடகாவிலும் நேற்று மொத்தம் 20 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. 

  திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் மொய்தீன் பாத்திமா என்பவரது வீட்டை சோதனையிட்ட அதிகாரிகள், நெய்வேலியில் உள்ள வேறு ஒரு வீடு, கைதான காஜாமைதீன் என்பவரின் மனைவிகள் வசிக்கும் கடலூர் மாவட்டம் நெய்வேலி, கொள்ளுமேடு வீடுகள், மேல்பட்டாம்பாக்கம் ஜாபர் அலியின் வீடு, பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த அப்துல் சமது என்பவரின் வீடு ஆகியவற்றில் சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர். 

 ஐபேட், கைபேசிகள், மடிக் கணினிகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

 சேலம் முகம்மது புறா பகுதியில் உள்ள அப்துல் ரகுமான் என்பவரின் வீட்டில் இரண்டாவது நாளாக  நேற்று அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.