அமைச்சர் ஜெயக்குமார்: தேர்தல் முன்கூட்டியே வராது

சென்னை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்கூட்டியே வராது என்று அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் திட்டவட்டமாகக் கூறினார். 

தமிழக சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் என்று வெளியாகிவரும் தகவல் உண்மையானதல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாள் நேற்று மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாகக் கொண்டாடப்பட்டது. 

அதனையொட்டி சென்னையில் ஓர் அரசு மருத்துவமனைக்குச் சென்ற அமைச்சர், அங்கு ஏழு பெண் குழந்தைகளுக்குப் பரிசுப்பொருட்களை வழங்கினார்.

அமைச்சர் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். 

தமிழகத்தில் 2021ல் சட்டமன்றத் தேர்தல் நடக்கவேண்டும். ஆனால்  தேர்தல் முன்னதாகவே நடக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் களத்தில் யூகச் செய்திகள் வலம் வருகின்றன. 

இந்நிலையில், தேர்தல் முன்ன தாகவே நடக்க வாய்ப்பே இல்லை என்று ஜெயக்குமார் கூறினார்.

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாகக் கூறிய அவர், நிர்பயா நிதியைக் கொண்டுதான் அரசு பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக பிரத்தியேகப் படச்சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நேற்று தமிழகம் எங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில்  ஜெயல‌லிதா படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தலைமைச் செயலகம் அருகே 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை  ‘மகிழம்’ மரத்தை நட்டு  அவர் தொடங்கி வைத்தார். பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.