கோவை: தமிழகத்தில் இரவு நேரங்களில் கூட பெண்கள் அச்சமின்றி வெளியே சென்று வரும் சூழல் நிலவுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருந்ததாகக் குறிப்பிட்டார்.
தமிழக அரசின் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக வலியுறுத்தி உள்ளது.
இதற்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, திமுக ஆட்சிக் காலத்தில் இருந்த ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனுக்கு வெள்ளை அறிக்கை உண்டா? என்று கேள்வி எழுப்பினார்.
"திமுக அரசு வைத்துச் சென்ற கடனுக்கும் சேர்த்தே, அதிமுக அரசு வட்டி கட்டி வருகிறது.
"அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் இது தொடர்பாக வெள்ளை அறிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை," என முதல்வர் சுட்டிக்காட்டினார்.
மேலும் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மாநிலம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சென்னையும் கோவையும் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களாக இருப்பதாகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மை மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார் முதல்வர் பழனிசாமி.
"இச்சட்டம் குறித்து சட்டப்பேரவையில் ஏற்கெனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும், பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் திமுக தொடர்ந்து செயல்படுகிறது," என்று முதல்வர் பழனிசாமி சாடினார்.

