மாநிலங்களவை உறுப்பினராக திமுக, அதிமுகவில் போட்டி

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெறுவதில் திமுக, அதிமுக பிரமுகர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருவதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து பதவியைக் குறி வைத்துள்ளவர்கள் தங்கள் கட்சித் தலைமையின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். முக்கியப் புள்ளிகளின் சிபாரிசை பெறுவதற்காக தங்களுக்கு சாதி ரீதியிலான ஆதரவும், செலவிடும் சக்தியும் இருப்பதை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இம்முறை மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனும் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. தேமுதிகவும்  எம்பி இடம் வேண்டும் எனக் கேட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் எதிர்வரும் ஏப்ரல் முதல் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து காலியாகும் இடங்களுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுகவைச் சேர்ந்த 4 பேர், திமுகவில் 2 பேர் என மொத்தம் ஆறு பேரின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

மாநிலங்களவைக்கு ஒரு எம்பியைத் தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அதன்படி இம்முறை திமுக, அதிமுக சார்பில் தலா 3 உறுப்பினர்களை போட்டியின்றித் தேர்வு செய்ய முடியும்.

இம்முறை அதிமுகவில் நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, நத்தம் விசுவநாதன், முன்னாள் எம்பி மைத்ரேயன், ஆகியோர் தங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என கட்சித் தலைமையிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவாளர்களில் தலா ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், மூன்றாவது இடத்துக்கு புதுமுகம் நிறுத்தப்படுவார் என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது.

திமுகவில் திருச்சி சிவா, சுப்புலட்சுமி ஜெகதீசன், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. 

மேலும், ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக இம்முறை தங்களுக்கும் மாநிலங்களவையில் இடம் ஒதுக்க வேண் டும் என கோரிக்கை விடுத்துள்ளது.