அமைச்சர்: மக்கள் நலனுக்காகவே ஜால்ரா

திண்டுக்கல்: மக்கள் நலனுக்காக ஜால்ரா போடுவது நல்லதுதான் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டத் திருத்தம் எனும் ஒரே ஒரு சட்டப் பிரச்சினையை எதிர்க்கட்சியான திமுக கையில் எடுத்து அதனைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று வத்தலக்குண்டு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

குடியுரிமைச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிப்புக்குள்ளானால் அவர்களைக் காப்பாற்ற அதிமுகதான் முதலில் நிற்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு மத்திய அரசுக்கு ஜால்ரா போடுவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் சீனிவாசன்.

“எதற்கெடுத்தாலும் இந்த ஆட்சி கவிழ வேண்டும். தூக்கி எறியப்பட்ட வேண்டும் என்றே எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புலம்பிக்கொண்டிருக்கிறார்.

“மத்திய அரசுக்கு ஏன் ஜால்ரா போடுகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். ஜால்ரா போட்டிருக்காவிட்டால் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்திருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார் அமைச்சர் சீனிவாசன்.