2018 நீட் தேர்விலும் முறைகேடு; தந்தையும் மகனும் கைது

சென்னை: 2018ல் நடந்த ‘நீட்’ தேர்விலும் ஆள்மாறாட்டம் மூலம் முறைகேடு நடந்துள்ளதாக கூறப் பட்டுள்ள புகாரின் தொடர்பில் சென்னை மருத்துவக்கல்லூரியில் பயின்று வந்த மாணவரும் அவரது தந்தையும் கைதாகி உள்ளனர்.

 கடந்த 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ‘குரூப்-4’, ‘குரூப்-2ஏ’, ‘விஏஓ’ தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலிசார்  விசாரணை நடத்தி வரும் நிலை யில், கடந்த 2018ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்விலும் முறைகேடுகள் நடந்துள்ளது   வெளிச்சத்துக்கு வந்துள்ளன. 

சிபிசிஐடி போலிசாரின் விசார ணையில் சென்னை, முகப்பேரைச் சேர்ந்த இடைத்தரகர் ஜெயகுமார், 38, டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தன், 45, உட்பட 47 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 

இவர்களில் ஜெயகுமார்,  ஓம்காந்தனை காவலில் எடுத்து போலிசார் விசாரித்தபோது,  2018ல் நடந்த ‘குரூப்-4’ தேர்விலும் முறை கேடு செய்ய முயன்றது வெளிச் சத்துக்கு வந்தது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற வைக்க 40 பேரிடம் தலா ஒன்பது லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளனர்.

தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், 2018ல் நடந்த ‘நீட்’ தேர்வில் முறைகேடு நடந்ததாக சென்னை மருத்துவக்கல்லூரி ‘டீன்’ ஜெயந்தி சிபிசிஐடி போலிசில் புதிய புகார் மனு ஒன்றைக் கொடுத் துள்ளார்.

இந்த புகாரின் தொடர்பில் சென்னை மருத்துவக்கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவர் தனுஷ் குமாரையும் அவரது தந்தை தேவேந்திரனையும் பிடித்து சிபிசிஐடி போலிசார் விசாரித்தனர். 

விசாரணையில், மாணவர் தனுஷ்குமார் ‘நீட்’ தேர்வு தரப் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் வந்து தேர்ச்சி பெற்றிருந்தார்.

பழமைமிக்க சென்னை மருத்து வக்கல்லூரியில் அவர் சேர்க்கப் பட்டார். இவரது சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம்,  போச்சம் பள்ளி. 

ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதுவதற்கு தனுஷ்குமாரின் தந்தை தேவேந்திரன் இடைத்தரகர் ஒருவர் மூலம் ரூ.20 லட்சம் லஞ்சமாகக் கொடுத்துள்ளார்.

தனுஷ்குமாருக்காக ஆள் மாறாட்டம் செய்தவர் பீகார் மாநிலத்தில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் இந்தியில் பரீட்சை எழுதி உள்ளார். ஆனால் தனுஷ்குமாருக்கு இந்தி தெரியாது என்பதால், அவர் இந்த வழக்கில் சிக்கிக்கொண்டார்.

தனுஷ்குமாரும் அவரது தந்தை தேவேந்திரனும் நேற்று கைது செய்யப்பட்டனர். இடைத்தரகராக செயல்பட்ட வரையும் கைது செய்ய போலிசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள னர்.