சென்னை: 'இந்தியன்-2' படப்பிடிப்பின்போது எதிர்பாராதவிதமாக பாரந்தூக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலியானார்கள். 10 பேர் காயமடைந்தனர்.
திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு படத்தின் நாயகனான நடிகர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதியுதவியும் தயாரிப்பு நிறுவனமான லைக்கா ரூ.2 கோடி நிதியுதவியும் அளிப்பதாக அறிவித்திருந்தன.
தற்போது, படத்தின் இயக்குநர் ஷங்கர் ரூ.1 கோடி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று இயக்குநர் ஷங்கர் வெளியிட்டிருந்த செய்தியில், "படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும் வேதனையில் இருந்தும் மன உளைச்சலில் இருந்தும் இன்னும் நான் மீளவில்லை. மீள முயன்று கொண்டிருக்கிறேன்.
"ஒரு மாதம் முன்புதான் என்னிடம் உதவி இயக்குநராக சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு என்னை உலுக்கிவிட்டது. ஒரு சரியான உதவி இயக்குநர் அமைந்துவிட்டார் என்ற என் மகிழ்ச்சி நீடிக்காமல் போனது என் துரதிர்ஷ்டம்தான்.
"எவ்வளவோ பாதுகாப்பும் முன்னேற்பாடுகளும் செய்திருந்தும் சற்றும் எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தை சிறிதும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன். மயிரிழையில் நான் உயிர் பிழைத்தேன் என்ற உணர்வைவிட அவர்கள் உயிர் இழந்துவிட்டார்களே என்ற வேதனைதான் என்னை வாட்டி எடுக்கிறது.
"அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன உதவி செய்தாலும் இழந்த உயிருக்கு ஈடாகாது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு ஏதோ ஒரு வகையில் சிறு உதவி செய்ய ஒரு கோடி ரூபாயை அளிக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

