4 ஆண்டுகளில் 8 எம்எல்ஏக்கள் மரணம்

4 ஆண்டுகளில் 8 எம்எல்ஏக்கள் மரணம்

2 mins read

சென்னை: தமிழகத்தின் இப்போதைய 15 வது சட்டமன்றம் ஏறக்குறைய நான்கு ஆண்டுகளில் எட்டு எம்எல்ஏக்களை இழந்து மிகமுக்கிய சோக மன்றமாக வரலாறு பதிக்கிறது.

இப்போதைய சட்டமன்றத்துக்கான தேர்தல் 2016ஆம் ஆண்டு மே மாதம் 21ல் நடந்தது. 134 இடங்களில் வென்று மறுபடியும் ஆட்சியை அதிமுக கைப்பற்றியது. அதேவேளையில், வெறும் 1% வாக்குகள் குறைவாக பெற்று 89 தொகுதி களைப் பிடித்த திமுக, அதிக பலத்துடன் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது.

அந்த இரண்டு கட்சிகளையும் வழிநடத்தி மாறிமாறி ஆட்சி நடத்தி வந்த அதிமுக இரும்புத் தலைவி ஜெயலலிதாவும் திமுகவின் இமாலயத் தலைவர் கருணாநிதியும் மறைந்தது இந்த 15வது சட்டமன்ற பதவிக் காலத்தின்போதுதான் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற எம் எஸ் சீனிவேல், 2016ல் தேர்தலில் வாக்குப் பதிவு முடிந்த அடுத்த நாளன்றே, வெற்றி செய்தியைக்கூட அறியாமலேயே 2016 மே மாதம் 25ஆம் தேதி மரணமடைந்தார்.

அடுத்து, சென்னை ஆர் கே நகர் தொகுதி உறுப்பினர் ஜெயலலிதா அதே ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வென்ற அதிமுக வேட்பாளர் ஏ கே போஸ், 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி திடீரென மாரடைப்பால் மாண்டார்.

அதையடுத்து, ஆக அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்த திருவாரூர் தொகுதி எம்எல்ஏ திமுக தலைவர் கருணாநிதி, 2018 ஆகஸ்ட் 8ஆம் தேதி மரணமடைந்தார்.

அடுத்ததாக, சூலூர் தொகுதி அதிமுக உறுப்பினர் சூலூர் கனகராஜ் மாரடைப்பால் 2019 மார்ச் 3 ஆம் தேதி காலமானார். விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏவான ராதாமணி 2019 ஜூன் மாதம் 14ஆம் தேதி இயற்கை எய்தினார்.

அடுத்ததாக திருவொற்றியூர் தொகுதி திமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே பி பி சாமி, கடந்த வியாழக்கிழமை மரணம் அடைந்தார்.

இவரின் இறுதிச் சடங்கு நடந்து 24 மணி நேரம் முடிவதற்குள் குடியாத்தம் தொகுதி திமுக உறுப்பினர் காத்தவராயன் காலமாகிவிட்டார். மொத்தத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் நால்வர், திமுக எம்எல்ஏக்கள் நால்வர் மாண்டுவிட்டனர்.

இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் மரணம் அடைந்து இருப்பது இப்போதைய 15வது சட்டமன்றத்தில்தான் என்பதை வரலாறு காட்டுகிறது.