கறி சோறு கேட்ட கணவரை நெரித்துக் கொன்ற மனைவி சிக்கினார், உண்மையைக் கக்கினார்

1 mins read

சென்னை: கறி சோறு சமைத்து கொடுக்கும்படி கேட்ட தன் கணவரை மனைவி கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டார்.

போலிஸ் துருவித் துருவி நடத்திய விசாரணையில் ரேகா என்ற அந்த 39 வயது பெண் கடைசியில் உண்மையை ஒப்புக்கொண்டார்.

சென்னையை அடுத்த எண்ணூரில் தன் கணவரான தணிகைவேல், 46, என்பவருடன் குடும்பம் நடத்தி வந்த ரேகா, இரண்டு பிள்ளைகளையும் பெற்றெடுத்தார்.

குடி பழக்கத்துக்கு அடிமையாகிவிட்ட தணிகைவேல், வீட்டுச் செலவுக்குப் பணமே கொடுக்காமல் இருந்து வந்ததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

ரேகா வீட்டு வேலை செய்து குடும்பம் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று இரவு மதுபோதையில் வீட்டுக்குத் திரும்பிய தணிகைவேல், கறி சமைத்துக் கொடுக்கும்படி மனைவியிடம் கேட்டார். பணம் இல்லாததால் சமைத்துக் கொடுக்க முடியாது என்று மனைவி திட்டவட்டமாகக் கூறினார்.

இதனால் கோபம் அடைந்த தணிகைவேல் மனைவியைத் தாறுமாறாகத் தாக்கிவிட்டதாகக் கூறப் படுகிறது. ஆத்திரம் பொங்கிய நிலையில், ரேகா தன் கணவரைக் கழுத்தை நெரித்து அதே இடத்தில் கொன்றுவிட்டார்.

குடும்பத் தகராறில் கணவரைப் பிடித்துத் தள்ளியதாகவும் தலையில் அடிபட்டு அவர் இறந்துவிட்டதாகவும் ரேகா நாடகமாடினார்.

ஆனால் பிரேதப் பரிசோதனையில் கணவர் கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதனையடுத்து போலிசார் துருவித்துருவி நடத்திய விசாரணையில் ரேகா எல்லாவற்றையும் கக்கினார்.

ரேகா மீது கொலை வழக்குப் பதியப்பட்டு இருக்கிறது. அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.