திருச்சி: திருச்சியில் ஹெலிகாப்டர் சேவையை அறிமுகப்படுத்த தனியார் நிறுவனம் ஒன்று தயாராகிவிட்டது. அந்தச் சேவை மார்ச் 7ஆம் தேதி தொடங்கும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் 'பிளானட் எக்ஸ் ஏரோஸ்பேஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிட்டெட்' என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ஏ செல்வகுமார் தெரிவித்தார்.
இதற்காக அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் அனுமதி கிடைக்கும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
திருச்சி விமான நிலையத்திற்கு அருகே ஹெலிகாப்டர் ஏறி இறங்குவதற்கான தளம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
திருச்சி, தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரமாக உருவெடுத்து வருகிறது. மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள அந்த நகரம், சுற்றுப் பயணிகளைக் கவரும் இடங்களில் முக்கியமான ஒரு நகராக மேம்பட்டு வருகிறது.
இதனிடையே, ஹெலிகாப்டர் சேவை தொடங்குவது தங்களுக்கு மிக மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுப் பயண ஏற்பாட்டாளர்கள் பலரும் தெரிவித்து இருக்கிறார்கள்.

