குடிநீர்: 300 சட்டவிரோத ஆலைகள் மூடல்; எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

2 mins read
4c298e77-ec39-44f2-b856-563691f5154c
காஞ்சிபுரத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த தண்ணீர் குழாயை அதிகாரிகள் மூடி அரக்கு வைத்தனர். இது போல பல மாவட்டங்களிலும் ஏராளமான குடிநீர் ஆலைகளின் கதவுகளை அதிகாரிகள் இழுத்து மூடிவிட்டார்கள். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அதிகாரிகள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக நடந்து வந்த 300 குடிநீர் ஆலைகளை அதிகாரிகள் இழுத்து மூடிவிட்டார்கள்.

பூமியில் இருந்து நீரை வெளியே எடுக்கும் ஆழ்துளைக் குழாய்களுக்கு அவர்கள் பூட்டு போட்டுவிட்டார்கள்.

இந்த முயற்சி தொடர்கிறது என்றும் மேலும் பல சட்டவிரோத ஆலைகள் மூடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக் கையை எதிர்த்து, தனியார் குடிநீர் விற்பனை நிறுவனங்கள் தொடர் போராட்டத்தில் தீவிரமாகக் குதித்து இருக்கின்றன.

அந்த நிறுவனங்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் சென்னை உள்ளிட்ட பல நகர்ப் பகுதிகளிலும் குடிநீர் விலை ஏறிவிட்டதாகவும் கிடைக்க வில்லை என்றும் கூறப்படுகிறது.

மாநிலத்தில் அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெறாமல் குடிநீர் நிறுவனங்கள் பூமியில் இருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீரை உறிஞ்சி எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைகிறது என்று கூறி தொடுக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளை இழுத்து மூடும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து குடிநீர் விற்பனை நிறுவனங்களை உள்ளடக்கிய பல அமைப்புகளும் சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்து பிரச் சினையைக் கிளப்பி வருகின்றன.

ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அரசாங்கம் சட்டவிரோத ஆலைகளை இழுத்து மூடி வருகிறது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று ஐந்து ஆலைகள் மூடப்பட்டன. இது போல மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சட்டவிரோத ஆலைகள் மூடப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 1,600க்கும் மேற்பட்ட குடிநீர் விற்பனை நிறுவனங்கள் செயல்படுகின்றன. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் 480 ஆலைகள் செயல்படுகின்றன.

இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் அன்றாடம் 10 லட்சம் குடிநீர் தோம்புகள் விநியோகிக்கப்படுகின்றன என்பது மிகவும் குறிப் பிடத்தக்கது.