தி.மலை: மார்ச் மாதத்துக்குப் பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிக்கும் என்று பரவிய வதந்தியை நம்பி துணை ஆட்சியர் ஒருவர், ரூ.500, ரூ.200 நோட்டுகளாக லஞ்சம் வாங்கியது அம்பலமாகி உள்ளது.
அவர் லஞ்சமாக வாங்கிய லட்சக்கணக்கான பணத்தை தன் வீட்டில் உள்ள பெட்டி ஒன்றில் குவித்து வைத்திருந்தார். அதை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட முத்திரைக் கட்டணம் தனித்துணை ஆட்சியராகப் பணியாற்றி வந்த தினகரன், அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். எனினும் புதிய பணியில் சேராமல் தன்னிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை உடனடியாக தீர்ப்பதாகக் கூறி, சம்பந்தப்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார்.
அவ்வாறு விவசாயி ஒருவரிடம் லஞ்சம் பெற்ற போது, லஞ்ச ஒழிப்புப் போலிசார் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
இதையடுத்து அவரது வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மொத்தம் 78.40 லட்சம் ரொக்கப் பணம், பல்வேறு சொத்து பத்திரங்கள் ஆகியவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையின் போது, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மார்ச் மாதத்துக்குப் பிறகு செல்லாது என்று தம்மிடம் சிலர் கூறியதை நம்பி, ரூ.200, ரூ.500 நோட்டுகளாக லஞ்சத் தொகையைப் பெற்றதாக தினகரன் தெரிவித்துள்ளார். அதனால் தான் பணக்கட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்றும் வீட்டில் உள்ள பெரிய டிரங்க் பெட்டியில் லஞ்சப் பணத்தை பதுக்கி வைத்ததாகவும் தினகரன் மேலும் கூறியுள்ளார்.

