ஈரோடு: மாரியம்மன் கோவிலுக்கு சீதனம் வழங்கிய இஸ்லாமியர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர். இது மத நல்லிணக்கத்துக்கு வலுசேர்க்கும் நிகழ்வாக கருதப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. குடமுழுக்கு விழாவை ஒட்டி கடந்த சில மாதங்களாக கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
இதன் தொடர்ச்சியாக கும்பாபிஷேக நிகழ்வு, கணபதி பூசையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 30 பேர் அம்மனுக்கு சேலை, தேங்காய், பழம், இனிப்பு ஆகியவற்றை சீதனமாக வழங்கினர்.
சீதனமாகத் தந்த பொருட்களை தட்டில் வைத்து இஸ்லாமியர்கள் சிலர் கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் அவை கோவில் நிர்வாகத் தரப்பிடம் அளிக்கப்பட்டன.
மேலும் கோவில் நிர்வாகம் சார் பில் வழங்கப்பட்ட பிரசாதத்தையும் பெற்றுக்கொண்டனர். சமய நல்லிணக்கத்துக்கு உதாரணமாக திகழ்ந்த இந்த நிகழ்ச்சியை கண்டு பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
"இது போன்ற செயல்பாடுகள் மதங்களைக் கடந்து மனிதர்கள் இணைந்து செயல்பட வழிவகுக்கும்," என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

