ராமதாஸ்: தமிழகக் கோயில்களை கையகப்படுத்த கூடாது

2 mins read
60412df7-e91f-41c6-988f-a94e182e7dbd
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள பழமை வாய்ந்த கோயில்களின் நிர்வாகத்தை மத்திய தொல்லியல் துறைக்கு மாற்றும் கலாசாரப் படையெடுப்பில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். படம்: ஊடகம் -

சென்னை: தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள பழமை வாய்ந்த கோயில்களின் நிர்வாகத்தை மத்திய தொல்லியல் துறைக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதன்படி தமிழகத்திலுள்ள பல கோயில்களின் பராமரிப்பும் நிர்வாகமும் மத்திய தொல்லியல் துறைக்கு மாற்றப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இது தமிழக மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் செயல் ஆகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் (படம்) தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய பெருமைமிகு பழம்பெரும் கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் இக்கோயில்களை எதற்காக மத்திய தொல்லியல் துறையிடம் தாரை வார்க்க மத்திய அரசு துடிக்கிறது என்று தெரியவில்லை.

இந்த தகவலை வெளியிட்ட மத்திய கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் அதற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை.

தமிழகக் கோயில்கள் மீது எடுக்கப்பட்ட கலாசாரப் படையெடுப்பு இது என டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.

வழிபாட்டில் உள்ள கோயில்களை மத்திய தொல்லியல்துறையிடம் ஒப்படைப்பது அக்கோயிலை மூடுவதற்கு ஒப்பானதாகும்.

தஞ்சாவூர் பெரிய கோயில், மாமல்லபுரம், செஞ்சி தேசிங்கு ராஜன் கோட்டை, திருவண்ணாமலை கந்தர் ஆசிரமம் ஆகியவை மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குச் சென்ற பிறகு அவற்றின் பராமரிப்பு மிகவும் மோசமாகிவிட்டது என்பது உண்மை.

2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தை மத்திய தொல்லியல் துறை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவித்து அதன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.

அதனால் அந்தக் கோயிலின் வழக்கமான வழிபாட்டு முறைகள் பாதிக்கப்பட்ட நிலையில், மூன்றாண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அந்த கோயில் மத்திய தொல்லியல் துறையிடம்இருந்து 2005ஆம் ஆண்டில் மீட்கப்பட்டது.

கடந்த 2018ஆம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோயிலை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள முடிவு செய்தது மத்திய தொல்லியல் துறை. ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து தொல்லியல் துறை அதன் முடிவில் இருந்து பின்வாங்கியது.

தமிழ்நாட்டு கோயில்களை மத்திய தொல்லியல் துறை கையகப்படுத்த முயன்றால் அதை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.