தூத்துக்குடி: பெண்களும் அனைத்து துறைகளில் ஆண்களுக்கு நிகராக பணியாற்றி வருவதாக உழைக்கும் பெண்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
எனவே ஆண்களுக்கு நிகராக சம ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கைதாகினர்.
உழைக்கும் பெண்கள் அமைப்பு பெண்கள் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெண்களுக்கு வேலை பாதுகாப்பு, ஆண்களுக்கு நிகரான ஊதியம், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைப்பின் தூத்துக்குடி பிரிவு சார்பில் நேற்று முன்தினம் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மறியலில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை போலிசார் கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

