தஞ்சையில் பழங்காலக் கோவில்கள் அருகே புதையலைத் தேடிய இருவர் கைது

1 mins read

தஞ்சாவூர்: புதையல் எடுக்க கோவில் அருகே பள்ளம் தோண்டிய இருவரை தஞ்சை போலிசார் கைது செய்துள்ளனர்.

சோழபுரத்தைச் சேர்ந்தவர் இப்னு காலிப். 36 வயதான இவர், மலேசியாவில் வேலை பார்த்தவர். அங்கிருந்த வேளையில் புதையல்கள் குறித்து இணையத்தளம் மூலம் பல்வேறு தகவல்களைத் திரட்டியுள்ளார்.

கோவில்களைச் சுற்றி புதையல்கள் இருக்கும் என்று கேள்விப்பட்ட அவர், நாடு திரும்பியவுடன் பீர் முகமது (65 வயது) என்பவருடன் இணைந்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள பழங்காலக் கோவில்களுக்குச் சென்று அவற்றின் அருகே புதையல்கள் இருக்கின்றனவா என ஆய்வு செய்துள்ளார்.

பூமிக்கு கீழே புதைந்துள்ள தங்கம் மற்றும் ஐம்பொன் போன்றவற்றைக் கண்டறியும் நவீன கருவி உதவியுடன் அவர் ஆய்வு மேற்கொண்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் திருவிடை மருதூர் காக்கேஸ்வரர் கோவில் அருகே இவர் அண்மையில் புதையலைத் தேடியுள்ளார். இதைக் கண்டு அப்பகுதி மக்கள் போலிசாருக்கு தகவல் தெரிவிக்க, இப்னு காலிப்பும், பீர் முகமதுவும் கைதாகினர்.