மதுரை: சென்னை அண்ணாசாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நால்வர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
அண்மையில் நிகழ்ந்த இந்த குண்டு வீச்சு சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய கும்பலை போலிசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த நான்கு பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்ததையடுத்து அவர்களை வரும் 11ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நால்வரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முன்விரோதம் காரணமாக இந்த குண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

