சேலம்: தனியார் சொகுசுப் பேருந்தில் வந்த பயணியிடம் இருந்து திருடப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைகளை சேலம் போலிசார் மீட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது.
தெலுங்கானாவைச் சேர்ந்த 31 வயதான கௌதம் என்பவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் நகைக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு 3 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம் மற்றும் வண்ணக் கற்கள் பதித்த நகைகளை அவர் கோவையில் உள்ள மற்றொரு கிளைக்கு எடுத்துச் சென்றார்.
இதற்காக அவரும், நகைக்கடையில் பணியாற்றும் மேலும் இருவரும் பேருந்தில் பயணம் மேற்கொண்டனர்.
கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அவர்கள் பயணம் செய்த தனியார் சொகுசுப் பேருந்து சங்ககிரி அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதி அருகே நிறுத்தப்பட்டது.
பேருந்து ஓட்டுநர் சற்று ஓய்வு எடுப்பதற்கும், இயற்கை உபாதையைப் போக்கிக் கொள்ளவும் பேருந்து நிறுத்தப் பட்டபோது கௌதம் கீழே இறங்கியுள்ளார். அவர் மீண்டும் பேருந்துக்குத் திரும்புவதற்குள் நகைகள் வைக்கப்பட்டிருந்த பை திருடப்பட்டிருந்தது.
இது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்ட போது மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஐந்து பேருக்கு திருட்டில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து திருட்டு நகைகள் விலைக்கு தேவை என்று தகவல் அனுப்பி ஐந்து பேரையும் சேலம் போலிசார் தர்மபுரி வரவழைத்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த நகைகளை ஆய்வு செய்த போது அவை கடந்த மாதம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்பது உறுதியானது.
இதையடுத்து ஐந்து பேரையும் கைது செய்ய முற்பட்ட போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனினும் ஐந்து பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து ஐவருக்கும் வலைவீசப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.

