கோவை: வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலத்திலிருந்தும் தமிழ்நாட்டுக்கு வந்து கூட்டம் மிகுந்த கோயில்களில் பெண்களிடம் நகைகளைப் பறித்த மூன்று சகோதரிகளைக் கேவை போலிசார் கைதுசெய்து இருக்கிறார்கள்.
அந்த மூவரும் ஒன்றுவிட்ட சகோதரிகள். அவர்களிடம் இருந்து 35 பவுன் நகைகளை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.
மூவரில் இருவரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்திருக்கும் போலிஸ், அவற்றை முடக்கிவைக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் நகைகளுடன் தலைமறைவாகி இருக்கும் பாண்டிய ராஜன் என்பவரை போலிஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.
போலிசிடம் பிடிபட்டதை அடுத்து பெண்கள் மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பல கோயில்களிலும் திருவிழாவின்போது கூட்டம் மிகுந்த நேரத்தில் பல பக்தைகளிடம் இருந்து தாங்கள் நகைகளைப் பறித்துச் சென்றதன் தொடர்பிலான விவரங்களை இவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரின் மனைவியான பராசக்தி, 36, லண்டனைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மனைவியான செல்வி, 36, கேரளா திருச்சூரைச் சேர்ந்த பாண்டிய ராஜன் என்பவரின் மனைவியான இந்துமதி, 27, ஆகிய மூன்று சகோதரிகளும் இப்போது கோவையில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் எந்தெந்த கோயில்களில் எப்போது எல்லாம் திருவிழாக்கள் நடக்கின்றன என்பதை இணையம் மூலம் அலசி ஆராய்ந்து அது பற்றிய விவரங்களைத் தன் மனைவி உட்பட மூன்று சகோதரிகளிடத் திலும் பாண்டியராஜன் தெரியப் படுத்துவார்.
அதன் அடிப்படையில், லண்டனில் இருந்து செல்வியும் கொழும்பில் இருந்து பராசக்தியும் இந்தியாவுக்கு வருவார்கள். அவர்கள் இந்துமதியுடன் சேர்ந்துகொள்வார்கள். மூவரும் கோயில்களுக்குச் சென்று கூட்டத்துடன் கூட்டமாகக் கலந்து பக்தைகளிடம் நகைகளைப் பறித்துவிடுவார்கள்.
இப்படி அவர்கள் பல ஆண்டு காலமாகக் கைவரிசை காட்டி இருக்கிறார்கள். தஞ்சை பெரிய கோயில், பழநி உள்ளிட்ட பல ஆலயங்களிலும் பக்தைகள் இந்தச் சகோதரிகளின் கைவரிசைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
இப்படி இருக்கையில், மிகவும் பிரபலமான கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் இம்மாதம் 4ஆம் தேதி நடந்தது.
அதில் கலந்துகொண்ட பல பெண்களும் நகைகளைப் பறிகொடுத்துவிட்டதாக போலிசிடம் புகார் தெரிவித்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் செயல்பட்ட போலிஸ், பிரத்தியேகப் படச்சாதனங்களை துருவித்துருவி ஆராய்ந்து கடைசியாக இந்த மூன்று சகோதரிகளையும் மடக்கிப் பிடித்தது.

