புதுக்கோட்டை: ஆசைவார்த்தைகளைக் கூறி, போலியாக உறுதி கொடுத்து அப்பாவிப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 13 பேர் புதுக்கோட்டையில் பிடிபட்டு இருக்கிறார்கள்.
கைதாகி இருப்போரில் ஐவர் பெண்கள். அந்த நகரின் பல இடங்களில் இருந்து மொத்தம் ஒன்பது பெண்களைப் போலிஸ் மீட்டுள்ளது.
இந்த விவகாரம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்கோட்டை வட்டார பெண்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து இருப்பதாகவும் ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டு உள்ளன.
இதன் தொடர்பில் புதுக்கோட்டை போலிசார் பல விவரங்களைத் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை நகரின் பல்வேறு இடங்களில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக மாவட்ட போலிஸ் தலைவருக்கு ரசகிய தகவல் கிடைத்தது. அது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க சிறப்புப் படை அமைக்கப்பட்டது.
புதுக்கோட்டையின் முக்கிய பகுதிகளான அன்னை அபிராமி நகர், பெரியார் நகர், ராஜகோபால புரம், சின்னப்பா நகர், டிவிஎஸ் நகர், காந்திநகர், அய்யம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பாலியல் தொழில் நடந்த வீடுகளை அந்தப் படையின் அதிகாரிகள் துல்லியமாக அடையாளம் கண்டனர்.
சரியான நேரம் பார்த்து காத்திருந்த அதிகாரிகள், அந்த வீடுகளில் திடீரென்று புகுந்து சோதனை நடத்தினர். அந்த வீடுகளில் இருந்த ஒன்பது பெண்களைப் போலிசார் மீட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணை மூலம் அந்தப் பெண்களைப் பாலியல் தொழிலில் தள்ளிய ஐந்து பெண்கள் உட்பட 13 பேர் அதிகாரிகளிடம் சிக்கினர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட 4 கார்கள், ஒரு ஆட்டோ மற்றும் ரூ. 3,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டன. 13 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி அப்பாவிப் பெண்கள் ஏமாற்றப்பட்டு உள்ளது தெரியவந்தது.

